சட்டவிரோத பஸ் பயணத்தால் பலியான உயிர்கள் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

மட்­டக்­க­ளப்பு – திரு­மலை நெடுஞ்­சா­லை வீதியில் கிரான் பிர­தே­சத்தில் கடந்த 25.06.2018 நள்ளிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த சிறுவன் உட்பட மூவர் பலியாகி இருந்தனர்.

இந்த மூன்று உயிர்கள் பலியானதற்கு காரணமான மாகா பஸ் வீதி போக்குவரத்து அதிகாரசபையில் அனுமதி பெறாது களவாக இரவு 11 மணிக்கு பின்னர் பயணத்தை மேற்கொண்டு வந்தமை தெரிய வந்துள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக குறித்த பஸ் வீதி அதிகார சபையின் பயண அனுமதியை பெறாமலேயே காத்தான்குடியிலிருந்து கொழும்பிற்கு சென்றுவந்தமை தெரியவந்துள்ளது.

மாகா என்ற பெயருடன் கொழும்பிற்கு பயணிக்கும் இரண்டு பஸ்களும் இது வரை வீதி போக்குவரத்து அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

வீதி போக்குவரத்து அதிகார சபையின் பதிவுகளின் படி NF 6768 ,NF 6767 என்ற இலக்கங்களை கொண்ட இரண்டு பஸ்களுமே பயண அனுமதியை பெறாது கடந்த மூன்று வருடங்களாக கொழும்பு பயணிகளை ஏற்றிச் சென்று வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்சினால் ஏற்படுத்தப்பட்ட விபத்தில் வேன் சார­தி­யான கல்­லடி நொச்­சி­மு­னையைச் சேர்ந்த பாலச்­சந்­திரன் வினோஜன் (வயது 24) மற்றும் பிரான்சில் இருந்து வந்த கொக்­கட்­டிச்­சோ­லையைச் சேர்ந்த பிரகாஸ் கெல்வின் (வயது 11) ஆகிய இரு­வரும் உயி­ரி­ழந்­ததுடன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மட்டக்களப்பு சீலாமுனையைச் சேர்ந்த வேல்முருகு சுபராஜ் (வயது 37) என்பவர் இரு வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி கடந்த 07 திகதி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்தும் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து மட்­டக்­க­ளப்பு கொக்­கட்­டிச்­சோலை நோக்கி வந்த வேனும் நள்­ளி­ரவு வேளையில் கிரான் இலங்கை வங்கி கிளைக்கு முன்­பாக நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் கிரான் இலங்கை வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவின் படி காத்தான்குடியில் இருந்து வந்த சொகுசு பஸ் கட்டுநாயக்காவில் இருந்து வந்த வான்மீது மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே குறித்த பஸ்சின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பஸ்கள் என்பதால் கடந்த மூன்று வருடங்களாக வீதி போக்குவரத்து அனுமதி இன்றி பயணித்தும் அதன் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறித்த விபத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை வழங்க கூடாது என கிரான் இலங்கை வங்கி கிளைக்கு தெரிவித்துள்ளனர். எனவே இந்த விபத்து தொடர்பான விசாரணையில் அரசியல் தலையீடு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற சட்டவிரோத பஸ்களின் பயணங்கள் வீதி விபத்துக்களை அதிகரிக்க செய்வதுடன் சட்டத்தை தவறாகவும் வழிநடத்த தூண்டுகிறது.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?