அரையிறுதி வெற்றியை தாய்லாந்து சிறுவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்: பிரான்ஸ் வீரர் நெகிழ்ச்சி

தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு, தங்களது அரையிறுதி வெற்றியை அர்ப்பணிப்பதாக பிரான்ஸ் கால்பந்து அணி வீரர் போக்பா தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில் குகைக்குள் சிக்கிக் கொண்ட சிறுவர்கள், 18 நாட்கள் உணவு மற்றும் நீரின்றி தவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, பலரது முயற்சிகளுக்கு பிறகு அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை காண அந்த சிறுவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சையில் இருப்பதனால் இது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பெல்ஜியத்தை 0-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீழ்த்திய பிறகு, பிரான்ஸ் வீரர் போக்பா தனது டிவிட்டர் பக்கத்தில் தாய்லாந்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களை பதிவிட்டு கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘வெற்றி, இந்த நாளின் நாயகர்களுக்குச் செல்கிறது. Welldone Boys. நீங்கள் தான் வலுவானவர்கள்’ என தெரிவித்துள்ளார்.