நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக்கோரி கிழக்கு தொண்டராசிரியர்கள் போராட்டம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் 456 பேருக்கும் நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐம்பதிற்கும் மேற்பட்ட தொண்டராசிரியர்கள் இணைந்து குறித்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தின்போது ஒரு ரூபா பணம்கூட பெறாமல் பாடசாலைகளுக்கு சென்று கல்வியை கற்பித்து வந்ததாகவும் தாங்கள் ஆசிரியர்கள் தொழிலுக்கு பொருத்தமானவர்கள் என நேர்முகப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டு மூன்று மாத காலமாகியும் இன்னும் நிரந்தர நியமனம் வழங்கவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எப்போது நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படவில்லையெனவும் தங்களுக்கு நிரந்த நியமனத்தினை பெற்றுத்தர கிழக்கு ஆளுநர் கூடிய கவனம் எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நிரந்தர நியமனம் வழங்கும் திகதியை அறிவிக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.