வட மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து வட மாகாணசபை உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.

இதன்போது பிரதேச செயலாளரை அச்சுறுத்தும் விதமாக குறித்த மாகாணசபை உறுப்பினர் செயற்பட்டதாக தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்த வீடமைப்பு திட்டமொன்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு தன்னை அழைக்கவில்லை என்றே மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் பிரதேச செயலாளருடன் முரண்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது, லிங்கநாதனே இது ஒன்றும் உங்கள் மாளிகை அல்ல, சபை பேச்சறிந்து பேசுங்கள், அரச பணி மக்கள் பணி, எமக்கு வேண்டாம் உங்கள் உரவல் பணி, அரச அதிகாரிகள் அச்சுறுத்தல் இன்றி பணியாற்ற இடமளியுங்கள், உங்கள் அரசியல் இங்கு வேண்டாம் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.